காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அமைச்சரிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பெண்கள் முறையிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுங்குவார்சத்திரம் குளம் அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இந்த குளத்தை தனியார் தொழிற்சாலையான மோபீஸ் இந்தியா நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் இக்குளத்தினை தூர்வாரி, மிகப்பெரிய நீர் ஆதாரமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. அதன் திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.கே தென்னரசு, ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் குளத்தினை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது மொளச்சூர் பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென அமைச்சரை அழைத்து, தங்கள் பகுதியில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை நிலவிவருவதாகவும் சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்க்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த போதும், தங்கள் பகுதியை ஒரு முறையாவது வந்து சுற்றிப் பாருங்கள் என அமைச்சரை பொதுமக்கள் அழைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, ஆட்சியர் தலையிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக பிரச்சினையை சரி செய்ய உங்கள் பகுதிக்கு வருவார் என தெரிவித்ததால் பெண்கள் சற்று சமாதானம் அடைந்தனர்.
