டாஸ்மாக் அமலக்கத்துறை சோதனை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இந்த விசாரணையை மேற்கொண்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின மீது நடவடிக்கை எடுப்பதா ? என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமலக்கத்துறை இந்த வழக்கில் வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? என்ற கேள்வியையும் நீதிபதிகள் முன்வைத்துள்ளார்கள். அமலக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு தரப்பில், கடந்த 2017 முதல் தமிழ்நாடு அரசு பல தனி நபர்கள் பணம் பெற்றது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஆனால் அமலாக்கத்துறை தற்போது தான் வந்துள்ளனர் என்றும் வாதிடப்பட்டது. ஒரு அலுவலகத்தில் அத்துமீறி அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக கணினி, பென் டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கினர்
தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்திற்கு வந்து இதுபோன்று நடந்துள்ளனர். இது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். அமலாக்கத்துறை எல்லை தாண்டி உள்ளது என்றும் கூட்டாட்சி அமைப்பை அமலாக்கத்துறை சிதைத்துள்ளது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியது. இதனைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன், துணை பொதுமேலாளர்கள் சங்கீதா, ஜோதி சங்கர் ஆகியோரையும் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை அமலாக்கத்துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளது.