நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 வீதம் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒதுக்கியுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜயின் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பலனாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் (MARB), நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களை வழங்கியுள்ளது.

இதன் மூலம், இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை திறன் 100-ல் இருந்து 150 இடங்களாக உயர்ந்துள்ளது.

மருத்துவ உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தியதன் விளைவாக, தமிழக அரசு இதுவரை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,200 எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2026–27 கல்வியாண்டுக்கான மாநில மருத்துவ கலந்தாய்வில் இந்த 150 கூடுதல் இடங்களும் சேர்க்கப்படும் என்றும், தேசிய மருத்துவ ஆணையம் இறுதி செய்துள்ள இட ஒதுக்கீட்டு பட்டியலின்படியே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version