மிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களை திடீரென மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத் தலைவர் அன்புசெல்வன் மற்றும் பொருளாளர் ராமநாதன் கூறியதாவது:

டாஸ்மாக் பார்களை இயக்குவதற்கான காலக்கெடு 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து ஜூன் 30, 2026 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பார்களை உடனடியாக மூடும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், புதிய உத்தரவு வெளியாகும் வரை பார்களை தொடர்ந்து இயக்கலாம் என தெரிவித்திருந்ததாகவும், அதனை நம்பி வணிக நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் திடீரென முன்னறிவிப்பின்றி மூட உத்தரவிடப்பட்டதால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் வீணாகி பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாளை சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுடன் மதுபானக் கடைகளையும் பூட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் எச்சரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version