மே மாதத்திற்கான ஊதியம் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வருகைப் பதிவேடு செயலி குளறுபடியைக் காரணம் காட்டி, பணியாளர்களின் சம்பளத்தில் பெருமளவில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.18,000 சம்பளம் வாங்கும் செவிலியர்களுக்கு இந்த மாதம் வெறும் ரூ.3,000 மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலம் வரை தங்களுக்குச் சம்பளம் முறையாக வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போதைய தவெக ஆட்சித் தொடக்கத்திலேயே இந்தச் செயலிப் பிரச்சனையால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாகவே சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுகாதார நிலைய ஊழியர்களுக்குச் சம்பளக் குளறுபடிகள் நீடித்து வருகின்றன. இது தொடர்பாக உயர்தர அதிகாரிகளைச் சந்திக்கப் பலமுறை முயன்றும், அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆன்லைன் வருகைப் பதிவு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், அலுவலகத்தில் உள்ள வழக்கமான வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பிடித்தமின்றிக் முழு ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பெண் காவலர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் பணியாளர்களுடன் கலைந்துபோகும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், தங்களது துறை சார்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றும், அவர்கள் நேரடியாக வந்து உறுதி அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் செவிலியர்களும் மருத்துவர்களும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version