தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாள் இன்று. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, தனது அறிவாற்றலாலும், தளராத உழைப்பாலும் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந்த கலைஞரின் வாழ்க்கைப் பயணம், ஒரு காவியம்.

1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி திருக்குவளையில் பிறந்த கலைஞர் கருணாநிதி, தனது இளம் வயதிலேயே சமூக மாற்றத்தின் மீது ஆர்வம் கொண்டார். ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, அதன் மூலம் தனது கொள்கைப் பரப்புரையைச் செய்தார். சினிமாத்துறையில் வசனகர்த்தாவாக நுழைந்த அவர், ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களின் மூலம் சமூக அநீதிகளைத் திரையில் தோலுரித்துக் காட்டினார். வசனங்கள் மூலமே ஒரு தலைமுறையையே மாற்றியமைத்தவர் அவர்.
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1957-ல் குளித்தலை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி, தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்தார். 1969-ல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை முதலமைச்சராகப் பணியாற்றிய கலைஞர், சமூக நீதியின் அடையாளமாகத் திகழ்ந்தார்.


பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனி இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு வித்திட்டவர். குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தைகள், கை ரிக்ஷாக்களை ஒழித்ததுது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்றவை அவர் முன்னெடுத்த முன்னோடித் திட்டங்கள். தமிழகம் முழுவதும் பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி நவீன தமிழகத்தை உருவாக்கினார். கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம் பெரும் சவால்களைக் கொண்டது. எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தைக் காக்க அவர் எடுத்த உறுதியான நிலைப்பாடு மற்றும் பல அரசியல் நெருக்கடிகள், அவரது தலைமைப் பண்பை உலகிற்கு பறைசாற்றின.
‘முத்தமிழறிஞர்’ என்று போற்றப்படும் கலைஞர், தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. தமிழுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததில் கலைஞரின் பங்கு முக்கியமானது. திருக்குறளுக்கு அவர் எழுதிய ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’ எனத் தமிழ் இலக்கியத்திற்கு அவர் வழங்கிய உரை விளக்கங்கள் காலத்தால் அழியாதவை. முக்கடல் சங்கமிக்கும் குமரியில் வள்ளுவருக்கு சிலை எடுத்து, குறளின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்தார். அரசு அலுவலகங்களில் கோப்புகள் முதல், மொழி வளர்ச்சி வரை எங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

எந்தப் பதவியில் இருந்தாலும், கலைஞரின் கைப்பேனாவும், நாக்கும் தமிழின் உரிமைக்காகவே ஓயாது உழைத்தன. இன்று அவரது 103-வது பிறந்தநாளில், அவர் விதைத்த சமத்துவக் கொள்கைகளும், அவர் கட்டிக் காத்த சமூக நீதியும் தமிழகத்தின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்கின்றன. “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்ற அவரது தாரக மந்திரம், இன்றும் பல இளைஞர்களுக்குப் போராட்டத்திற்கான ஊக்கத்தை இன்றும் அளித்துக் கொண்டிருக்கிறது.
