கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மாநாட்டு நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், இன்று காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையை தற்காலிக சிபிஐ அலுவலகமாக மாற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வேலுச்சாமிபுரம் பகுதி மக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் தவெக நிர்வாகிகள் என பலரிடமும் அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டன.

இடையில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விசாரணை, தற்போது தேர்தல் முடிந்து தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று முதல் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீசாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் மட்டும் இன்று கரூர் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். எஞ்சிய போலீசாரும் விரைவில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version