காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் தமிழர் விரோதப் போக்கை கர்நாடக மாநில அரசு கைவிட வேண்டும் எனக் கண்டித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திருமாவளவன் தனது எக்ஸ்தளப் பதிவில் கூறியுள்ளதாவது…
காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் கூட காவிரியில் நீர் திறந்துவிடாத கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒழுங்காற்றுக் குழுவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்துவரும் 15 நாட்களுக்கு 3500 கியூசெக் நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால், அதையும் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் போராடுகின்றனர்.
குறுவை சாகுபடி இல்லாமல் போய்விட்டது. சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக் குறியாகி உள்ளது. இனியும் கர்நாடகா அரசு நமக்கு நியாயம் செய்யும் என நம்புவதற்கு இடமில்லை. எனவே, தமிழ்நாட்டின் சார்பில் நாம் நமது நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
