சாதிமாறி காதலித்ததால் நெல்லையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கவின் தந்தை சந்திரசேகருடன் முதல்வரை சந்தித்து பேசினோம். அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கவின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

கவின் கொலையில் கூலிப்படைக்கும் தொடர்பு உள்ளது என கவின் தந்தை முதல்வரிடம் கூறியுள்ளார். தனது இளைய மகளுக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.பள்ளி ஆசிரியையாக உள்ள கவின் தாயாருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வசிக்கும் பகுதியிலேயே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளோம். ஆணவக் கொலை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு.

கல் உடைக்கும் தொழிலாளர் வாரியம் அமைக்க விசிக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்..
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் அந்த தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தொழிலாகவே நிரந்தரப்படுத்துவிட கூடாது என்பதற்காகவே அதை எந்திரமயமாக்க வேண்டும் என்று கூறினேன் . தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் அந்த தொழிலை செய்யலாம் என்ற சூழலை உருவாக்க வேண்டும் .
அதை தவறாக புரிந்து கொண்டு நான் தூய்மை பணியாளர்களுக்கு எதிராக பேசியதைப் போல் சிலர் விமர்சிக்கின்றனர்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version