தூத்துக்குடி மாவட்டம் அமுதநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம், மூன்றாவது மைல் அருகே செயல்படும் அரசு மதுபானக் கடையுடன் இணைந்திருந்த மதுபானக் கூடத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அரசு மதுபானக் கடை மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 17-ஆம் தேதி காலை போலீசார் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் மீனாட்சிசுந்தரம் மற்றும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் இணைந்து அருணாச்சலத்தை கைது செய்து, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலத் தகுதிச் சான்று பெறப்பட்டதாகவும், அதன் பிறகு காவல் நிலையத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் வைக்கப்படும் அறையில் மற்ற கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அப்போது அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலத்திற்கு தலையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக ரத்தக்கசிவு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலத்தின் மரணத்திற்கு காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதே காரணம் என குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரம் குறித்து அவரது தந்தை நாகராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி, “என் அண்ணன் முழுமையான உடல்நலத்துடன் இருந்தார். அவருக்கு எந்தவித உடல்நலக் குறையும் இல்லை. காவல்துறையினர் தாக்கியதால்தான் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், பிரேதப் பரிசோதனை நீதித்துறை நடுவர் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களின் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் விசாரணை மீது பொதுமக்கள் கவனம் திரும்பியுள்ளது.
