கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, பேரிகை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் தக்காளி சாகுபடியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டில் எல்நினோ பருவநிலை தாக்கத்தால் மழை குறைந்து, நீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற கணிப்பை முன்னிட்டு, குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய பயிராக கருதி ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக போதிய மழையும், நீர்வளமும் கிடைத்ததால் செடிகள் நன்கு வளர்ந்து, தற்போது அதிகளவில் விளைச்சல் கிடைத்து வருகிறது.
விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக, சூளகிரி மற்றும் ராயக்கோட்டை வேளாண் சந்தைகளுக்கு தினமும் அதிக அளவில் தக்காளி வரத்து பதிவாகி வருகிறது. இதன் விளைவாக சந்தையில் தேவை மற்றும் வரத்து இடையே சமநிலை குலைந்து, தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி சுமார் ரூ.10-க்கும், 25 கிலோ எடையுள்ள ஒரு கிரேட் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை வியாபாரிகளும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தெருவோரங்களில் 5 கிலோ தக்காளியை ரூ.50 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தக்காளி சாகுபடிக்காக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் தொழிலாளர் கூலி உள்ளிட்ட அனைத்து உற்பத்திச் செலவுகளும் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தற்போதைய சந்தை விலை செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அரசு உரிய தலையீடு செய்து, தக்காளிக்கு ஆதரவு விலை நிர்ணயிப்பதோடு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சேமிப்பு வசதிகளை அதிகரித்து, விவசாயிகளின் இழப்பை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
