தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவைத் தொடர்பு படுத்தி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள  உதயநிதியின் வீட்டில் போலீசார் சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் நகரில் உள்ள பனகல் கட்டிடம் அருகே காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகத் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சரைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் நாகரிகமற்ற முறையில் ஆபாசமாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, இந்த ஆர்ப்பாட்ட உரையின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சுட்டிக்காட்டி பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு பேசியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உரையாடல் அடங்கிய 2 நிமிடம் 39 வினாடிகள் கொண்ட வீடியோவை திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுப் பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தலைமையில் தவெக நிர்வாகிகள் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரில் சென்று புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த வீடியோவைப் பரப்பிய திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் இந்தப் புகார் தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு விசாரணைக்கு வந்துள்ளனர். அவர்கள் உதயநிதியை காவல் துறை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை கொடுப்பதற்காக வந்ததாகவும், அவரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் போலீசாருக்கு உதவியாக, சென்னை நீலாங்கரை காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய உள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் மதியழகன் உள்பட திமுகவினர் அங்கு கூடியுள்ளனர்.

உதயநிதியின் வீட்டுக்கு செல்லும் பாதையில் பேரிகார்டு வைத்து போலீசார் மறைத்துள்ளதால் திமுகவினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அத்துமீறி நுழைந்து சென்றுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version