தமிழக வெற்றிக் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுடலை, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக, முன்னாள் தவெக பெண் நிர்வாகி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி கமலா. தவெக ஒன்றிய துணைச் செயலாளராக இருந்த இசக்கி கமலா, தவெக நிர்வாகிகள் தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாலா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த இசக்கி கமலா, பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வரும் தவெகவை சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் வாத்து சுடலை மீது புகார் அளித்தார். சுடலையிடம் தான் வாங்கிய பணத்தை கொடுத்த பின்னரும், தன்னிடம் பணத்தைக் கேட்டு மிரட்டுவதாகவும் வீட்டிற்கு வந்து ஆபாச வார்த்தைகளால் பேசி வருவதாகவும் மேலும் தனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளிக்கும் வகையில் மிரட்டல் விடுத்து வருவதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் தனக்கு இவ்வாறு தொந்தரவு அளித்து வருவதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறிய இசக்கி கமலா, தமிழக முதல்வர் விஜய் அண்ணா அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான புகார்கள் எழுப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
