முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றும் முடிவை எடுத்துள்ளார். வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படவிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில் முதல்வரின் அறை, அவரது செயலகம் மற்றும் நான்கு செயலாளர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

முதல்வர் விஜய் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பணியாற்றி வரும் நிலையில், இந்த அமைப்பு வாஸ்து நெறிகளுக்கு ஏற்றதாக இல்லை என அவரது ஜோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, அலுவலகத்தை மாற்றும் யோசனை முதல்வருக்கு எழுந்தது. இந்த சூழலில், தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள பிரமாண்டமான மாநாட்டு அரங்கம் முதல்வரின் கவனத்தை ஈர்த்தது. அனைத்துக் கட்சி கூட்டங்கள், கலெக்டர்கள் மாநாடு உள்ளிட்ட முக்கிய அரசு நிகழ்வுகள் இங்கு நடைபெறுவது வழக்கம்.

சமீபத்தில் இங்கு நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டின் போது, 10-வது மாடியில் இருந்து காணப்படும் வங்காள விரிகுடாவின் அழகிய கடல் காட்சி முதல்வரை ஈர்த்தது. பரந்து விரிந்த கடல் தோற்றம் மனதுக்கு அமைதியும் உற்சாகமும் அளிப்பதாக அவர் கருதினார். இதுகுறித்து ஜோதிடருடன் ஆலோசித்தபோது, அவர் இந்த இடத்துக்கு முழு ஒப்புதல் அளித்தார். “ஆட்சியின் உச்சத்தில் அமர்ந்து நீங்கள் ஆட்சி நடத்தும் போது அனைத்தும் சுபமாகவும் வெற்றிகரமாகவும் அமையும். இன்னும் பல உயரங்களை எட்டுவீர்கள்” என்று ஜோதிடர் உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின், முதல்வரின் முழு அலுவலகமும் 10-வது மாடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. முதல்வரின் தனி அறை, சி.எம். செயலகம், செயலாளர்கள் அலுவலகங்கள், ஆலோசகர்கள் அறைகள் மற்றும் அருகிலேயே ஒரு மினி கான்பரன்ஸ் ஹால் உருவாக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, முதல்வர் விஜய்யின் முழு நிர்வாக அமைப்பும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் இருந்து இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் ஆட்சியின் செயல்திறனை அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version