வியாழன்று இரவு ஈரான் மீது நடத்துவதாக உத்தேசிக்கப்பட்ட தாக்குதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூன் 11ஆம் தேதி மாலையில் டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதாக எச்சரித்திருந்தார்.
அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை (VERY HARD TONIGHT) நடத்தவுள்ளது. ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார், விமான எதிர்ப்பு பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், அவற்றின் பெரும்பாலான தாக்குதல் திறன்களும் ஏற்கனவே முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன!
அதிக தொலைவில் இல்லாத மிக அருகாமை எதிர்காலத்தில், நாம் ஈரானின் கார்க் தீவு (Kharg Island) மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களைக் கைப்பற்றுவோம். வெனிசுலா நாட்டில் நாம் செய்தது போன்றே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் அமெரிக்கா தனது வசம் எடுத்துக்கொள்ளும். இந்த நடவடிக்கை வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்த முறையில் பலனளித்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்களது கவனத்திற்கு நன்றி
எனக் கூறியிருந்தார்.
இதனால் என்ன நடக்குமோ என உலகமே அதிர்ச்சியில் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இரவு 10;58க்கு தனது பதிவில் போர் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
“இஸ்லாமிய குடியரசான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள், அந்நாட்டின் மிக உயர்மட்டத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில்; அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் என்ற முறையில், இன்று மாலை ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களையும் குண்டுவெடிப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன்.
இவ்விஷயம் தொடர்பான விவாதங்களும் இறுதி அம்சங்களும் — கொள்கை அளவிலும் மற்றும் மிக விரிவாகவும் — இதில் சம்பந்தப்பட்ட அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் இதர நாடுகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் (Transaction) முழுமையாக இறுதி செய்யப்படும் வரை கடற்படை முற்றுகை (Naval Blockade) முழு பலத்துடன் தொடர்ந்து அமலில் இருக்கும் — இது கையெழுத்தாகும் நேரம் மற்றும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்த நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் தரப்பும் தயாராக இருப்பதாக ஈரானும் கூறியிருந்தது.
