வியட்நாமில் நேரிட்ட படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டன.

வியட்நாமின் ஹோசி மின் நகரில் இருந்து வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டு, மும்பை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

செல்போன் நிறுவனம் சார்பில் அதன் இந்திய விற்பனை முகவர்கள் மற்றும் ஊழியர்கள் என 105 பேர் கடந்த ஜூலை 8-ம் தேதி வியட்நாமுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 32 பேர் கொண்ட குழுவினர் கடலில் படகில் சென்றபோது, பெரிய அலை மோதியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர், ஆந்திரத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 17 பயணிகளும், படகு ஊழியர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இறந்தவர்களின் உடல்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்ததையடுத்து, அவற்றை அங்கிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களைப் பெற்று அவர்களின் சொந்த ஊர்களுக்கு விரைவாக அனுப்பி வைப்பதற்காகத் தமிழக அதிகாரிகள் குழுவினர் மும்பையிலேயே முகாமிட்டு தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகளில் 16 பேர் தாயகம் திரும்பிவிட்டதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version