காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பல உணவகங்கள் உள்ளது. அவற்றில் ஒன்றான துர்கா பவன் உணவகத்தில் பல வாடிக்கையாளர்கள் மதிய சாப்பாடி சாப்பிட வந்துள்ளனர். சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிலருக்கு வாயில் எரிச்சல் ஏற்பட்டதோடு, வாந்தியும் வந்ததாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் உணவக உரிமையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்சனை பெரிதானதை அடுத்து, உணவக நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட இலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி மறைத்ததாக கூறப்படுகிறது.
இது வாடிக்கையாளர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. உணவக நிர்வாகம் இது குறித்து தெரிவிக்கையில் வழக்கமாக கேன் குடிநீரில் சமைப்போம் என்றும் இன்று மெட்ரோ குடிநீரில் சமைத்தோம் சமைக்க பயன்படுத்திய நீரில் குளோரின் அதிக அளவில் கலந்திருந்ததால் இந்த பிரச்சினை என்று விளக்கம் அளித்தனர். இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உணவகத்தில் பயன்படுத்தப்படும் நீர் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதிக்க வேண்டும் என சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
