முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் சென்னையில் ஒருசில அரசு பள்ளிகளுக்கு தனியார் அமைப்பு மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்னும் பெயரில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தவெக அரசின் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என அறிவித்ததோடு வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமரஜர் காலை உணவுத் திட்டம் என தமிழக அரசு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த பெயர் மாற்ற உத்தரவினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிய தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை எனத் தெரிவித்துள்ளார்.
