தமிழகத்தில் 75 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில் இல்லாத வகையில் புதிய சாதனையாக இந்த சட்டமன்ற தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால், இது முந்தைய தேர்தல்களில் வாக்குகள் அதிகரிக்கும், இயல்பான போக்கோடு ஒத்துப்போவதால், இதுவொரு புதிய உச்சம் கிடையாது எனவும் தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் 15ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதன்படி கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரியில் கடந்த 9ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் இன்று (ஏப்.23) தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்திலும் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.
சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகும் எனக் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் 74 ஆண்டு கால சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு85.07 விழுக்காடு வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்றுள்ள 16 சட்டசபை தேர்தல்களில், அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு 78.2 சதவீத வாக்குகளும், குறைந்த அளவாக 1957-ம் ஆண்டு 46.84 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 25 ஆண்டுகால தேர்தல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், ஆண்டு தோறும் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு.
கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 4.74கோடியில், 2.80 கோடி பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 59.07 சதவீதம் ஆகும்.
இதேபோல் 2006 தேர்தலில் 4.66 கோடி வாக்காளர்களில் 3.28 கோடி பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 70.56 சதவீதம் ஆகும். கடந்த தேர்தலைவிட 11 சதவீதம் அதிகம். அதாவது 48 இலட்சம் வாக்குகள் அதிகம் பதிவானது.
2011 தேர்தலிலும் மொத்த வாக்காளர்களான 4.66 கோடியில், 70.56 சதவீதம், அதாவது 3.28 கோடி வாக்குகள் பதிவானது. கடந்த தேர்தலை விட 40 இலட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவானது.
2016 தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.77 கோடியாக அதிகரித்திருந்த நிலையில், அதில் 4.32 கோடி வாக்குகள் பதிவாகி 74.81 சதவீத வாக்குப்பதிவை தொட்டது. கடந்த தேர்தல்களை விட 64 இலட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.
2021 தேர்தலில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு 73.63 சதவீதம் ஆகும். 2016 தேர்தலை விட 28 லட்சம் வாக்குகளே அதிகம் பதிவாகி இருந்தது.
இந்தச் சூழலில்தான், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் 5.73கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் விவரத்தை வெளியிட்டது. கடந்த தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட இது 56 லட்சம் குறைவுதான். இவர்களில் ஏறத்தாழ 4.87கோடி பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். 2021 தேர்தலைவிட ஏறத்தாழ 30 லட்சம் வாக்குகள் அதிகம் விழுந்துள்ளது.
2021 தேர்தலைவிட 56 லட்சம் வாக்காளர்கள் குறைந்த நிலையிலும் 30 இலட்சம் வாக்குகள் அதிகம் செலுத்தப்பட்டுள்ளதால், வாக்கு சதவீதம் 85.07 ஆகி சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது முந்தைய தேர்தல்களில் வாக்குகள் அதிகரிக்கும், இயல்பான போக்கோடு ஒத்துப்போகிறதே தவிர, இதுவொரு புதிய உச்சம் கிடையாது.
ஆகையால் இந்த தேர்தலை ‘unprecedented’ என்று சொல்ல வேண்டுமெனில், தற்போதைய போக்கை தாண்டி மிகப்பெரிய ஏற்றம் இருக்க வேண்டும். இல்லையெனில், இது ஒரு இயல்பான வளர்ச்சியின் தொடர்ச்சி தான்.
