Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க என தவெகவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது இப்போது அவருக்கு எதிரான பூமராங்காகி உள்ளது.
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது.
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில திமுக கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலைப்பாட்டை மதிக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க என தவெகவை விமர்சித்திருக்கிறார்.
தவெக ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கையை தங்களது தோழமைக் கட்சிகள் வழங்கியுள்ளபோதும், பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?”
பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்கன்னு மக்கள் பார்க்கப் போறாங்க எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு தவெக தரப்பில் இருந்தும் சமூக வலைத்தளங்களிலும் எதிர்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
காங்கிரசை விமர்சிப்பது ஏன்?
107 இடங்களைக் கைப்பற்றியிருந்த தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 இடங்கள் தேவைப்பட்டபோது முதன்முதலில் ஆதரவுக் கரம் நீட்டியது 5 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ்தான்.

சட்டமன்ற தேர்தலின்போது திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாவதற்கு முன்பாக, இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் எனவும், திமுக கூட்டணியில் இருந்தால் ஆட்சியில் பங்கு கேட்கும் என கருத்துக்கள் பரவின. தவெகவுடன் காங்கிரஸ் கைகோர்ப்பதை உறுதி செய்வதுபோல், காங்கிரஸ் மேலிட நிர்வாகியும், ராகுல்காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான கிரிஷ் சோடங்கர் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை என செய்திச் சேனலுக்கு பேட்டியும் அளித்திருந்தார்.
இதன்பிறகு திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தாலும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்ட கூட்டணியாகவே தமிழக மக்களுக்கு தெரிந்தது. இந்தச் சூழலில்தான் விசில் அலையால் திமுக கூட்டணி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்தச் சூழலில்தான் டெல்லி தலைமையின் அறிவுறுத்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்தனர். ஆனால் திமுகவிடம் இதுகுறித்து தெரிவிக்காததால், அதிருப்தியில் இருந்த திமுக கூட்டம் போட்டு காங்கிரஸுக்கு துரோகி என்று முத்திரை குத்தியது.
ஆனால், இன்று அதே திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் எல்லாம் திமுகவுடன் கலந்தாலோசனைக்குப் பிறகு தங்கள் ஆதரவை தவெகவுக்கு அளித்துள்ளனர்.
ஆக, தன்னிடம் ஆலோசனை கேட்காமல், காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவெடுத்து சென்றதுதான் திமுகவுக்கு கோபமா என்னும் கேள்வியை எழுப்பியுள்ளனர் சமூகவலைத்தள வாசிகள்.

சி.வி.சண்முகத்துக்கு ஸ்டாலின் பதில் அளிக்காதது ஏன்?
தவெகவுக்கு Clean Politics செய்யவில்லை என நேரடியாக குற்றச்சாட்டு பதிவிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சி.வி.சண்முகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு மட்டும் ஏன் நேரடியாக விடையளிக்க மறுக்கிறார் என்பது சமூக வலைத்தளவாசிகள் மற்றும் தவெகவினரின் கேள்வியாக உள்ளது.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க என ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் அதிமுக இப்போது பிளவுபடுவதற்கு முதன்மைக் காரணமே ஸ்டாலின் தான் என்பதே சி.வி.சண்முகம் குற்றச்சாட்டின் அடிநாதமாக உள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பின்னர், தவெக ஆட்சி அமைக்க இழுபறியாகிக் கொண்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது எடப்பாடி தலைமையில் ஆட்சிக்கு ஆதரவளிக்க திமுக தயாராக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும், அதனை நாங்கள் ஏற்கவில்லை எனவும் சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே போட்டுடைத்தார்.
சி.வி.சண்முகத்துக்கு பதில் அளிக்கிறேன் என செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதியோ, இதனை நேரடியாக மறுக்காமல், நாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். சி.வி.சண்முகத்துக்கு பதவி அரிப்பு என விமர்சித்தார்.

ஆனால், சி.வி.சண்முகமோ தொடர்ந்து இதனையே கூறி வருகிறார். இதற்கு மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூட அப்படியெல்லாம் இல்லை என பதிவிடவில்லை. ஒருவேளை முதலமைச்சராக இருந்தவர், இருப்பவரிடம் மட்டுமே ஸ்டாலின் நேரடியாக டீல் செய்வாரோ என்னவோ? என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஷோஃபா பாலிடிக்ஸ்
இதேபோல் சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பேசிய உதயநிதி, அதிமுக பிளவுபட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய ஷோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போகிறார். புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது என கூறியிருந்தார்.

அப்படியானால் ஓரிரு நாட்களுக்கு முன்பாக திருமாவளவனை சந்திக்க அசோக் நகர் அலுவலகத்துக்கு விஜய் வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கு 2 புதிய ஷோஃபாக்கள் கொண்டு வரப்பட்டதே… அதனையும் ஏன் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிடவில்லை என எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் தவெகவினர்.
நழுவிய லகான் – கை கொடுக்கும் அதிமுக
தவெகவுக்கு ஆதரவு கொடுத்த திமுக கூட்டணிக் கட்சியினரை லகானாக்கி, விஜய்யின் ஆட்சியைக் கட்டுப்படுத்த முயன்ற மு.க.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் அதிமுகவில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்களும் ஆதரவளித்துள்ளது ஸ்டாலினின் திட்டத்தை தவிடுபொடியாக்கி உள்ளது. அந்தக் கோபம்தான் Clean Politics- Dirty Politics என ஸ்டாலினை பேச வைத்திருப்பதாகவும், உண்மையில் இப்போது மு.க.ஸ்டாலின் செய்வதுதான் Dirty Politics எனவும் வரிசைகட்டுகிறார்கள் தவெகவினரும், சமூக வலைதளவாசிகளும்.
– எம்.செய்யது
