வட மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் அத்தொகுதியை ராஜினாமா செய்தது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளன.
இது குறித்து மாநில அரசு மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து, ஜூலை முதல் வாரத்தில் இடைத்தேர்தல் அட்டவணை வெளியாகும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த தாமதத்தின் பின்னணியில், குதிரை பேர குற்றச்சாட்டும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கும் முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தவெக தனது பெரும்பான்மை பலத்தை சுயமாக பூர்த்தி செய்துகொள்வதற்காக சில அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததாகவும், இதன் பின்னணியில் குதிரை பேர அரசியல் இருப்பதாகவும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து திமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது தொடர்பாக அதிமுக எம்.பி.இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், “அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். குதிரை பேரம் குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில்தான், தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கான இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிப்போட்டுள்ளது.

