சிவகங்கை மாவட்டத்தில், பைனான்ஸ் அதிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பெண் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் தம்பிபட்டியைச் சேர்ந்த 40 வயது பைனான்ஸ் அதிபர் வடிவேலுவை கடந்த ஜூன் மாதம் கைபேசி மூலம் தொடர்புகொண்ட ‘கவிதா’ என்ற பெண், நட்புடன் பேசி பழகியுள்ளார். மேலும் தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி கடந்த ஜூன் 9-ஆம் தேதி வடிவேலுவிடமிருந்து G Pay மூலம் 4ஆயிரத்து 500 ரூபாயும் வாங்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை தொடர்பு கொண்ட கவிதா, காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் இனிமை காணலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி வந்த வடிவேலுவை பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு கவிதா அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி மறைந்திருந்த கும்பல் ஒன்று வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததோடு, கொடூரமாகத் தாக்கி ₹50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. மேலும், அவரது ஹோண்டா இருசக்கர வாகனத்தையும் செல்போனையும்பறித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், முதல் குற்றவாளியான கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
