சைக்கிளில் உலகைச் சுற்றும் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண், புகைப்படம் எடுக்க முயன்றபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் முதுகெலும்பு இரண்டு இடங்களில் முறிந்துள்ளது. ஆயினும், முழுமையாக குணமடைந்த பிறகு தனது உலகச் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடருவேன் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் நார்விச்சைச் சேர்ந்த 30 வயதான மடில்டா பைன் (Matilda Pine), உலகைச் சுற்றி சைக்கிளில் பயணம் செய்யும் இரண்டு ஆண்டு சாகசத்தை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கினார். அதே நேரத்தில், Cycle for Good என்ற தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நோக்கமும் அவரது பயணத்திற்கு இருந்தது.
துருக்கியில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, நண்பரின் தோளில் ஏறி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது நண்பர் எழுந்து நிற்கும் வேளையில், பின்னால் தவறி விழுந்த அவர் முதுகில் பலத்த காயமடைந்தார்.
விபத்து தொலைதூர வயல்வெளிப் பகுதியில் நடந்ததால், சுமார் இரண்டு மணி நேரம் அவர் அங்கேயே படுத்திருந்தார். பின்னர் நண்பரின் உதவியுடன் சாலையை அடைந்து, டாக்சியில் சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், முதுகெலும்பு இரண்டு இடங்களில் முறிந்திருப்பதும், முதுகுத் தண்டின் எலும்புகள் சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது. எனினும், முதுகுத் தண்டுவட நரம்பில் (Spinal Cord) எந்த பாதிப்பும் ஏற்படாததால், அவர் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது துருக்கியின் கெய்செரி (Kayseri) நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மடில்டா பைன், பயணக் காப்பீட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் விமானம் மூலம் ஸ்ட்ரெச்சரில் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் பயணம் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. பயணத்தை இப்போது நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் என் கால்கள் நன்றாக செயல்படுகின்றன. நான் முழுமையாக குணமடைவேன். 100 சதவீதம் மீண்டும் உலகச் சுற்றுப்பயணத்தை தொடர்வேன்,” என்றார்.
பால்கன் நாடுகள் வழியாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணித்த அவர், தனது அனுபவங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். ஆனால் இந்த விபத்தால் அவரது சாகசப் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், மீண்டும் சைக்கிள் ஓட்டத் தொடங்க குறைந்தது ஆறு மாதங்கள் ஓய்வு அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்ததும் மத்திய ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மடில்டா பைன் தெரிவித்துள்ளார்
