திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள், நள்ளிரவில் அடையாளம் தெரியாத வட மாநில இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக வீட்டின் உள்ளே நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் சத்தமிட்டுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், இது குறித்து கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. அந்த அச்சம் நீங்குவதற்குள், மீண்டும் இத்தகைய சம்பவம் அரங்கேறியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரே வாரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கவரைப்பேட்டை காவல்துறையினர், பொதுமக்களால் தாக்கப்பட்ட அந்த இளைஞரை மீட்டு, சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் எதற்காக வீட்டிற்குள் நுழைந்தார்? திருடும் நோக்கத்திலா அல்லது வேறு ஏதேனும் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட முயன்றாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
