கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட கூட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ கையில் எடுத்தது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மார்ச் 17-ம் தேதி ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
முன்னதாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த செந்தில் பாலாஜி, “ஊடகங்களில் வெளியாகும் முரணான செய்திகளைத் தவிர்க்கவே நேரில் ஆஜராகிறேன். சிபிஐ-யின் அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்து முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகியுள்ளார். சிபிஐ அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சுமார் 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கூட்டத்தின் போது திட்டமிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எழுந்த தவெக-வின் குற்றச்சாட்டு, சம்பவத்திற்குப் பின் கரூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்திக்கச் சென்றது மற்றும் அங்கிருந்த சூழல் குறித்த விவரங்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசியல் தலையீடு இருந்ததா என்பது குறித்தும் கேள்வி எழுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிபிஐ வளையத்திற்குள் வந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
