இந்தியாவின் நாளைய நம்பிக்கைகளான சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தை புற்றுநோய் எனும் கொடிய அரக்கன் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள அண்மைக்கால புள்ளிவிவரங்கள், இந்தியக் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2023-ம் ஆண்டின் ஆய்வு முடிவுகளில் 5 முதல் 19 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரின் மரணத்திற்கு மிக முக்கியமான 10 காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது, மருத்துவ நிபுணர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
புற்றுநோயின் பல்வேறு வகைகளில், ரத்தப் புற்றுநோய், மூளைப் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மற்றும் நிணநீர் மண்டலப் பாதிப்புகள் ஆகியவையே இந்தியக் குழந்தைகளை அதிகளவில் அச்சுறுத்துவதாக இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் செல்ல வேண்டிய பிள்ளைகள், இன்று கொடிய வேதிச் சிகிச்சைகளுக்காக (Chemotherapy) மருத்துவமனை அறைகளில் முடங்கிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோயைப் பற்றிய போதிய புரிதல் சமூகத்தில் இல்லாததும், நோய் முற்றிய பின்னரே சிகிச்சைக்கு வருவதும் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
வேகமாக மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த வாழ்வியல் முறை அல்லது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றில் எது இத்தகைய பாதிப்புகளுக்கு மூலகாரணம் என்பதைத் துல்லியமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஏதோ ஒரு சாதாரண சுகாதாரப் பிரச்சினை அல்ல; தேசத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் ஒரு பெரும் ஆபத்து. எனவே, அரசு வெறும் தரவுகளை மட்டும் சேகரிக்காமல், இந்த நோய்க்கான அடிப்படை வேர்களைக் கண்டறிந்து அவற்றை வேரறுக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையங்களை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக்க வேண்டும். ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறியும் பரிசோதனைகளை (Screening) கட்டாயமாக்குவதும், எளிய மக்களுக்கும் உயர்தரச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இன்றைய அவசரத் தேவையாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் காட்டும் அலட்சியம், வருங்கால இந்தியாவின் வலிமையைச் சிதைத்துவிடும் என்பதில் ஐயமில்லை.
