பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ள நாடுகளில் தங்கி வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியை தீவிரவாதி அபூபக்கர் சித்திக் பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்வானி ரத யாத்திரையில் பைப் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் மற்றும் 1995 ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டுவெடிப்பு என பல தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி யூனீஸ் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் வைத்து தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஆந்திரா காவல் துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இருவரும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் இருந்த அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலியை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த ஆறு நாட்களாக விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தது அதன்படி இந்த விசாரணையில் ஆந்திர காவல்துறையினர் மற்றும் மத்திய உளவு பிரிவு போலீசாரும் தனித்தனியாக வந்து விசாரணை நடத்தினர்.
நேற்றைய தினம் இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் தற்போது அபூபக்கர் சித்திக் கிடம் நடத்திய விசாரணையில் காவல்துறைக்கு கிடைத்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, அபூபக்கர் சித்திக் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று சில காலம் தங்கி இருந்து வெடிகுண்டு எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த பயிற்சி பெற்றதாகவும் மூன்று ஆண்டுகள் துபாயில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியும் உள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அபுபக்கர் சித்திக் இந்தியா திரும்பிய பிறகு சிலருக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.