கோவையில் குவியும் இறைச்சி கழிவுகளில் இருந்து எழும் துர்நாற்றத்தால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதி பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துகடவு சட்டமன்ற தொகுதியில் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள மயானத்தின் அருகில் ஆடு, மாடு, கோழி, மற்றும் பன்றி இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுவட்டார பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய்தொற்று பரவும் ஆபத்தும் அதிகரித்துள்ளது.
இந்த மயானத்திற்கு அருகிலேயே செட்டிபாளையம் காவல் நிலையம், அரசு மேல்நிலை பள்ளிகளும் அமைந்துள்ளது. இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளின் துர்நாற்றத்தால் சில நேரங்களில் காவல்துறையினரும் தங்கள் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
காகம்,கழுகு போன்ற பறவை இனங்கள் இரைதேடி இந்த பகுதிக்கு படையெடுத்து வருவதுடன், பறவைகள் அந்த இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளிலும், வீட்டின் மாடிகளிளும் இட்டு செல்வதால் வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள். மேலும், இறைச்சி கழிவுகளால் நோய்தொற்று பரவுவதற்க்கு முன்பாக செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்