அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டது
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் முதல் நாளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் குவிந்துள்ளன. அதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலைஞர் மகளிர் உரிமை கோரி முதல் நாளில் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.