வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற AI தொழில்நுட்பம் அவசியம் என விண்வெளி வீரர் சுபான்ஷி சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷி சுக்லா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சுபான்ஷூ சுக்லா, பல்வேறு விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவியாக AI தொழில்நுட்பம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற AI தொழில்நுட்பம் அவசியம் என குறிப்பிட்ட அவர், 2047ம் ஆண்டுக்குள் நமது வளர்ச்சியின் கனவை அடைய AI தொழில்நுட்பம் உதவும் என்றார். இந்தக் கனவை நிறைவேற்றும் பொறுப்பை, நமது இளைய தலைமுறையினர் ஏற்றுக் கொண்டால், 2047ம் ஆண்டுக்கு முன்பாகவே அந்த இலக்கை நாம் அடைவோம் என்று சுபான்ஷி சுக்லா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான உயர்மட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு வர பிரதமர் மோடி எப்போதும் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். AI தொழில்நுட்பத்தை எளிமையாக கற்பிக்கும் வகையில் முடிவு செய்துள்ள மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
