மத்திய பிரதேசதத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த மாற்று சிகிச்சைக்கு பிறகு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலசீமியா நோயால் (ஹீமோகுளோபின் உற்பத்தியைப் பாதிக்கும் ஒரு மரபணு ரத்தக் கோளாறு) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்ட மருத்துவமனையில் ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளில் 6 குழந்தைகளுக்கு தற்போது எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்பே இது கண்டறியப்பட்ட போதிலும், தற்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுஎச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 8 முதல் 12 வயது உடையவர்கள் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் கவனக்குறைவால் மட்டுமே குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ரத்த மாற்று சிகிச்சை செய்யப்படும். அவ்வாறு ரத்தம் மாற்ற சிகிச்சையின் போது, 6 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒரு குழந்தையின் பெற்றோருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது. ஆனால், மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எங்கு ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? யாருடைய இரத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்து இந்த குழு விசாரணை மேற்கொள்ளும். இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ரத்த வங்கியில் உள்ள இரத்த தானம் செய்தவர்களின் பட்டியலை விசாரித்து வருகிறது. எச்.ஐ.வி பாதித்தவர்களின் இரத்தம் ஏற்றப்பட்டதால் இந்த தொற்று பரவியதா? இல்லையெனில், எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலம் இந்த பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் கூறும்போது, “ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள், தங்களை பற்றிய முழு தகவல்களையும் குறிப்பிட்டு ஒரு படிவத்தை நிரப்புவார்கள். அதன் பிறகு, அவர் ரத்தம் வழங்க தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இவ்வளவு வழிமுறைகளை மீறி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. இதுதொடர்பான விசாரணையில் தவறு எங்கே நடந்துள்ளது என்பது கண்டறியப்படும்” என்றார்.
இதனிடையே, மத்திய பிரதேசத்தில் 70 ஆயிரம் எச்ஐவி நோயாளிகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் வயது வந்தோர் 0.1 சதவீதத்தினர் ஆவார்கள். தேசிய வழிகாட்டு விதிகளின்படி எச்.ஐ.வி, ஹைபடைடிஸ் பி, ஹைபடைடிஸ் சி மற்றும் பிற பாதிப்புக்கள் உள்ளனவா? என்பதை கண்டறிந்த பின்னரே இரத்தம் சேகரிக்க வேண்டும் என்ற வழிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் சத்னா மாவட்டத்தை தவிர்த்து, பிற மாவட்டங்களில் இருந்தும் ரத்தம் பெறப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
