ஆஸ்திரேலியா சிட்னி கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் நபர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரைக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது வழக்கம். குறிப்பாக, நேற்று முன்தினம் (டிச.14) போண்டி கடற்கரையில் அந்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ‘சானுக்கா’ விழா கொண்டாடப்பட்டது.

இதனால் கடற்கரை பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த இருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். துப்பாக்கி சத்தத்தை கேட்டதும், அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டனர். அதில் 50 வயதான சஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொருவரான சஜித்தின் மகன் நவீத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் என்ன? துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் பின்புலம் தொடர்பாக ஆஸி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சஜித் அக்ரம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டை ஆஸ்திரேலிய போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், தனது கடவுச்சீட்டை அவர் ஹைதராபாத்தில் இருந்து பெற்றதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சஜித்தின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க மத்திய, மாநில உளவு அமைப்புக்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநில டிஜிபி அலுவலகம் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சஜித் அக்ரம் தொடர்பாக பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், சஜித் அக்ரம் பி.காம் பட்டப்படிப்பை முடித்துள்ளதும், அவர் கடந்த 1988இல் மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியா சென்றதும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்னதாக அவர் ஹைதராபாத்தில் உள்ள டோலிசௌக்கில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சஜித் ஆஸ்திரேலியாவில் ஒரு ஐரோப்பிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்தியாவில் இருந்து சென்ற இந்த 27 ஆண்டுகளில் அவர் ஆறு முறை மட்டுமே இந்தியா வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சஜித்தின் மகன் நவீத் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவருக்கு பெரிய அளவில் தொடர்பில்லை என்றும் கூறுப்படுகிறது. குறிப்பாக, தனது தாத்தா இறந்தபோதும் கூட அவர் இந்தியா வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த சூப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நவீத் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டால் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான காரணம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version