மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டோர் பயணித்த Bombardier Learjet 45 என்ற விமானம் 100% பாதுகாப்பானது என்று வி.எஸ்.ஆர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த பாம்பார்டியர் லியர்ஜெட் 45 என்ற வணிக ஜெட் விமானம், புதன்கிழமை பாராமதி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகி தரையிறங்கியதில், அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
VSR Ventures பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானதும், VT-SSK எனப் பதிவு செய்யப்பட்டதுமான அந்த விமானம், தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. அந்த ஜெட் விமானம் பாராமதியில் விபத்துக்குள்ளாகி தரையிறங்கியதாகவும், அதில் பயணம் செய்த எவரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Learjet 45 என்பது இரட்டை எஞ்சின்கள் கொண்ட ஒரு லைட் பிசினஸ் ஜெட் விமானமாகும். இது பெரும்பாலும் கார்ப்பரேட் மற்றும் விஐபி பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் சிறிய அளவும், அதிக வேகமும் காரணமாக, குறுகிய மற்றும் நடுத்தர தூரப் பயணங்களுக்கு இது ஏற்றதாக உள்ளது. மேலும், பாரமதி போன்ற பிராந்திய விமான நிலையங்களுக்கான பறப்புகளுக்கும் இது மிகவும் பொருத்தமானதாகும்.
ஆரம்ப தகவல்களின்படி, தரையிறங்கும் கட்டத்தில் ஜெட் விமானம் சிக்கலை எதிர்கொண்டதாக தெரிகிறது. ஆனால், நிகழ்வுகளின் துல்லியமான வரிசை இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. விபத்துக்குப் பிறகு, உள்ளூர் விமான நிலைய பணியாளர்களும் அவசர மீட்பு குழுக்களும் உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்தனர். அங்கு விமானம் முழுமையாக சேதமடைந்த நிலையில் இருந்ததுடன், உயிர் தப்பியவர்களுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து அதிகாரிகள் அந்தப் பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தொடக்க கட்ட விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர். விபத்திற்கான காரணங்களை கண்டறிய, விமானத்தின் பறப்பு தகவல் பதிவி மற்றும் காக்பிட் உரையாடல் பதிவி ஆகியவை மீட்கப்படவுள்ளன. மேலும், தரையிறங்கிய தருணத்தில் விமானக் குழுவினரின் தகவல் பரிமாற்றம், விமானத்தின் தொழில்நுட்ப செயல்பாடுகள் மற்றும் அந்நேரத்தில் நிலவிய வானிலைச் சூழ்நிலைகள் ஆகியவற்றையும் விசாரணைக் குழு நுணுக்கமாக ஆய்வு செய்யும்.
விமானம் 100% பாதுகாப்பானது: VSR Ventures Pvt. Ltd. நிறுவனம் நியூ டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. விஜய் குமார் சிங் மற்றும் ரோஹித் சிங் ஆகியோர் இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த நிறுவனம், இன்றைய விபத்தில் சிக்கிய விமானம் உட்பட மொத்தம் 17 விமானங்களை இயக்குகிறது. விபத்தில் சிக்கிய விமானத்தில் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்று VSR Ventures நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி விஜய் குமார் சிங், அந்த ஜெட் விமானம் “100 சதவீதம் பாதுகாப்பானது” என்றும், “மிகவும் அனுபவம் வாய்ந்த” விமானக் குழுவினரால் இயக்கப்பட்டதாகவும் கூறினார்.
“விமானம் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதில் எந்தவிதமான கோளாறும் இல்லை,” என சிங் தெரிவித்தார். தொழில்நுட்பக் குறைபாடு எதுவும் இல்லை. குறைந்த பார்வைத் திறன் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், விபத்துக்கான இறுதியான முடிவு டிஜிசிஏ (DGCA) விசாரணையின் பின்னரே தெரியவரும் எனவும் சிங் கூறினார்.
ஆரம்பக் கட்ட தகவல்களின் அடிப்படையில், விமானி ஓடுபாதையை (runway) தவறவிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது என்றும் அவர் கூறினார். விபத்தில் உயிரிழந்த கேப்டன் கபூர் சுமார் 16,000 மணிநேர பறக்கும் அனுபவம் பெற்றவர் என்றும், பதக் (Pathak) சுமார் 1,500 மணிநேர பறக்கும் அனுபவம் கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனத்தின் வசம் உள்ள மீதமுள்ள லியர்ஜெட் விமானங்கள் தரை இறக்கப்படுமா என்று கேட்டபோது, அந்த முடிவை எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று சிங் கூறினார். “நான் ஏன் அவற்றை தரை இறக்க வேண்டும்? அவை அனைத்தும் தகுதியான விமானங்கள். உலகளவில் லியர்ஜெட் ஒரு மிகவும் நம்பகமான விமானம்,” என்று அவர் கூறினார்.
நிறுவனத் தகவல்களின்படி, VSR நிறுவனத்திற்கு 15 ஆண்டுகளுக்கு மேலான செயல்பாட்டு அனுபவம் உள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றி வருவதாகவும், வாடிக்கையாளர் திருப்தி விகிதம் 99 சதவீதம் எனவும் நிறுவனம் தெரிவிக்கிறது. நியூ டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் போபால் ஆகிய நகரங்களிலிருந்து இந்த நிறுவனம் தனது விமான சேவைகளை இயக்கி வருகிறது.
