கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 247 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்கள் உட்பட பல விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு நேற்று (02.07.2025) ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். இதனால் விமானம் வியன்னாவில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டும், முடியவில்லை. அதனால் பயணிகள் அனைவரும் வியன்னாவில் இறக்கி விடப்பட்டனர். விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமான நிர்வாகம் அறிவித்தது. பாதி வழியில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டதால் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். புறப்படுவதற்கு முன்பே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version