மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சிச் சின்னங்கள் மறைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஃபால்டா (Falta) தொகுதியில் உள்ள  144 மற்றும் 189 ஆகிய வாக்குச்சாவடிகளில் பாஜக-வின் தாமரைச் சின்னம் டேப்பால்  மறைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா எக்ஸ்  தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, மறுதேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.

பாஜக தலைவர் பகிர்ந்த வீடியோவின் நம்பகத்தன்மையை ஆணையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் கள நிலவர அறிக்கைகள் ஆராயப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுத்த மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி, சின்னங்கள் மறைக்கப்பட்டதாகப் புகார் எழுந்த வாக்குச்சாவடிகளில் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் ஒரு சின்னம் மறைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் கண்டிப்பாக மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஒரு தொகுதிக்குள் பல இடங்களில் இத்தகைய திட்டமிட்ட முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், ஒட்டுமொத்த தொகுதிக்கும் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

சின்னங்கள் மறைக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஃபால்டா தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின் சின்னங்களை மறைத்திருந்த டேப்புகள் அகற்றப்பட்டன. இருப்பினும், வாக்காளர்கள் தங்கள் விருப்பமான சின்னத்திற்கு வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது ஜனநாயக விரோதச் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த மறுவாக்குப்பதிவு உத்தரவு, முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தற்போது டெல்லியில் இருந்தபடி மேற்கு வங்கத் தேர்தல் களத்தைத் தேர்தல் ஆணையம் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version