மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் குறித்து கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் அதை விளக்குவதற்கு தயாராக உள்ளதாகவும், அதற்கான தேதி மற்றும் நேரத்தை நீங்களே தேர்வு செய்து கூற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் ஆணைய குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் முதலாவதாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்தது குறித்து கேள்வி எழுப்பினார். இரண்டாவதாக போலியான வாக்காளர்களை சேர்த்தது. மூன்றாவதாக வாக்கு சதவிதம் அதிகமானது. நான்காவதாக போலி வாக்குகள் அதிகரித்தது என குற்றஞ்சாட்டி இருந்தார். குறிப்பாக மகாராஷ்டிரா வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் எல்லா தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தேர்தல் நடைமுறை விதிகளின் அடிப்படையிலேயே நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ர தேர்தலில் 1 லட்சத்து 186 பூத் அதிகாரிகளும், 288 வாக்குப்பதிவு அதிகாரிகளும், 139 பொது பார்வையாளர்களும், 41 காவல் பார்வையாளர்களும், 71 செலவீன பார்வையாளர்களும், 288 தேர்தல் திருப்புதல் அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர். இதேபோன்று அரசியல் கட்சிகளும் தத்தமது பங்குக்கு பூத் ஏஜெண்டுகளும் நியமித்துக் கொண்டன. காங்கிரஸ் கட்சியும் 28,421 பூத் ஏஜெண்டுகளை நியமித்து இருந்தது.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களால் கூட எவ்வித ஆட்சேபணையும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் குறித்து கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் அதை விளக்குவதற்கு தயாராக உள்ளதாகவும், அதற்கான தேதி மற்றும் நேரத்தை நீங்களே தேர்வு செய்து கூற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் ஆணைய குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version