உத்தரப்பிரதேசத்தில் காதல் திருமணம் செய்த மகளை காவல்நிலையத்தில் வைத்தே தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் ஷிவானி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லலித் வர்மா என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் அப்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த மே மாதம் 18-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் தங்களின் திருமணத்தை முறைப்படி பதிவும் செய்து கொண்டனர். இதற்கிடையில் ஷிவானியை காணவில்லை என்றும், லலித் வருமா அவரை கடத்திச் சென்று விட்டதாகவும் ஷிவானியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருவரும் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அவர்களை கைது செய்து அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாக கூறி தங்கள் திருமண ஆவணங்களை காட்டியுள்ளனர்.
அப்போது, இருதரப்பு குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். ஷிவானியின் பெற்றோர், லலித்தை மறந்துவிட்டு தங்களுடன் வீட்டிற்கு வந்துவிடுமாறு ஷிவானிக்குக் அழுத்தம் கொடுத்தனர். ஆனால், ஷிவானி கணவர் லலித்துடன் மட்டுமே வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டார்.
இதனால் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஷிவானியின் தாய் ரன்னோ, ஷிவானியைப் பின்னால் இருந்து இறுக்கமாக பிடிக்க, ஷிவானியின் தந்தை தான் வைத்திருந்த கத்தியால், போலீசார் கண்முன்னே ஷிவானியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷிவானியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க, அங்கு சிகிச்சை பலனின்றி ஷிவானி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஷிவானியின் தந்தை உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

