மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகைக்காக சுமார் 14,000 ஆண்கள் முறைகேடாக பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டைப் போலவே பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் ’லாட்கி பகின்’ திட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலையொட்டி அவசர கதியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதால், திட்ட பயனாளர்கள் விவரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது இத்திட்டத்தில் முறைகேடாக நிதியுதவி பெற்று வரும் நபர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். ’லாட்கி பகின்’ திட்டத்தில் 14,298 ஆண்கள் முறைகேடாக உதவி பெற்று வந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 26-ம் தேதி துணை முதலமைச்சர் அஜித்பவார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கான திட்டத்தில் நிதியுதவி பெற்ற ஆண்களிடமிருந்து அவர்கள் பெற்ற பணம் திரும்ப பெறப்படும் என கூறியிருந்தார்.

அதேப் போல, ’லாட்கி பகின்’ திட்டத்தில் உரிய தகுதியில்லாமல் 26.3லட்சம் பயனாளர்கள் நிதியுதவி பெற்று வந்ததாக அமைச்சர் அதீதி தட்காரே கூறியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ பெண்கள் நலத்துறை ‘லாட்கி பகின்’ திட்ட பயனாளர்கள் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது. இதில் வருமான வரித்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ‘லாட்கி பகின்’ திட்டத்தில் பயன் பெற தகுதியில்லாத 26.3 லட்சம் பெண்கள் நிதி உதவி பெற்று வருவது தெரியவந்தது.

சிலர் ‘லாட்கி பகின்’ தவிர வேறு திட்டப்பயன்களையும் பெற்று வந்து உள்ளனர். அவர்களின் பெயர் பயனாளர்கள் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சரிபார்ப்பார்கள். அதன்பிறகு தகுதி உள்ளவர்கள் நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version