மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ள நிலையில், அதன் தாக்கங்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து பிரதமர் மோடி நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் சர்வதேச எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் இந்தியாவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளைத் தவிர்க்க இந்தக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கவும், கள்ளச்சந்தை மற்றும் பதுக்கல்களைத் தவிர்க்கவும் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இருப்பினும், தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) காரணமாக இந்தக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க மாட்டார்கள் என்றும், அந்த மாநிலங்களின் சார்பில் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “டீம் இந்தியா” அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இந்த கூட்டத்தின் முக்கிய இலக்காகும். முன்னதாக இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
