கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் பகுதிகளில் அமீபா மூளைக்காய்ச்சல் நோய் தொற்று அதிகமாக பரவி வருகிற்து. இந்த காய்ச்சலால் கோழிக்கோட்டில் 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதேபோல் திருச்சூர் மாவட்டத்தில் 59 வயதானவர் கடும் காய்ச்சல், தலைவலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மாதிரிகளை சோதனை செய்ததில் அவருக்கு அமீபா மூளை காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் அந்த நபர் பணியாற்றி வந்த இன்னொருவரும் இறந்ததால் அவர்கள் வேலை செய்து வந்த ஹோட்டலை மூட மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும் ஹோட்டல் இருக்கும் பகுதியில் உள்ள கிணற்று நீரை எடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அமீபா மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேர் கோழிக்கோட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் 13 வயது சிறுவனுக்கும் அமீபா மூளைக்காய்ச்சல் நோய் தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனுடன் சேர்த்து இதுவரை 11 பேருக்கு அமீபா மூளை காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version