பெங்களூருவில் வெளிநாட்டு ரகத்தை சேர்ந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான செல்லக் கிளியை பிடிக்க முயற்சித்த தொழிலதிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பெங்களூருவில் உள்ள கிரிநகரைச் சேர்ந்தவர் அருண் குமார் (32). தொழிலதிபரான இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள மெக்காவ் ரக கிளியை வளர்ந்து வந்தார்.
இந்நிலையில், இந்த கிளி வீட்டில் இருந்து பறந்து சென்று, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்தின் மீது அமர்ந்தது. அந்த கிளி மின்சாரம் தாக்கி இறந்து விடுமோ என அஞ்சிய அருண் குமார், இரும்பு கம்பி ஒன்றை வைத்து அதனை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி மின்சார கம்பியின் மீது மோதியதால் மின்சாரம் தாக்கி அருண் குமார் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து, அருணை அவரின் உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்த அருண்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, அவரது குடும்பத்தினரி டம் ஒப்படைக்கப்பட்டது.
