வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதியில், துலைல் பள்ளத்தாக்கின் தார்தெய் கிலோ (Tartei Kilo) கிராமத்தில் இன்று (ஜூன் 17) கடுமையான மேகவெடிப்பு நிகழ்ந்தது. திடீரெனப் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக கிராமமே வெள்ளக்காடாக மாறியது.
இந்த மேகவெடிப்பின் விளைவாக, பல டஜன் குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், திடீர் வெள்ளத்தால் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் காப்பாற்றிக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மாதத் தொடக்கத்தில், ஜூன் 4 அன்று ரியாசி மாவட்டத்தின் பாத்தோய் பகுதியில் மேகவெடிப்பு நிகழ்ந்து பல வீடுகள் சேதமடைந்தன. இதேபோல், நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் டோடா, கிஸ்த்வார் மற்றும் பூஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களில் நான்கு இடங்களில் மேகவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இது ஜம்மு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களில் நிகழும் ஐந்தாவது மேகவெடிப்பு சம்பவமாகும்.
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை நேரில் கண்காணித்து வரும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க ரியாசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அவசர காலங்களில் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
