நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நீட்-யுஜி மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு, மோசடி மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 ஆம் தேதி வரை தற்காலிக கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பதிவுகளை திருத்தும் வசதியையும் ஜூன் 30 ஆம் தேதி வரை முடக்குமாறு டெலிகிராமுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே பூட்டு போடுவது போன்றது இந்த டெலிகிராம் தடை” என விமர்சித்துள்ளார். பல லட்சம் மாணவர்கள் பல ஆண்டுகளாக குறிப்புகள், மாதிரி தேர்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் தேர்வுத் தயாரிப்புகளுக்காக டெலிகிராமை பயன்படுத்தி வருவதாகவும், அந்த வசதியையே பறிப்பது எப்படி வினாத்தாள் கசிவுக்கு தீர்வாகும் என்றும், வினாத்தாள் கசிவைத் தடுக்க மோடி அரசின் புதிய தந்திரமா இது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தேர்வு நாளில் மாணவர்களை தீவிரமாக சோதிப்பார்கள், வினாத்தாள்களை விமானப்படை மூலம் அனுப்புவார்கள்; ஆனால் பிரச்சினையின் வேரான வினாத்தாள் கசிவு மாஃபியாக்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லை” என அவர் குற்றம்சாட்டினார்.
மாணவர்களை அல்ல, வினாத்தாள் கசிவு கும்பல்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், “மாணவர்களின் குரலை கேளுங்கள்” என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
