இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது இருக்கும் வரிகளையும் கடந்து, கூடுதலாக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களில் ‘கட்டாய உழைப்பு’ அல்லது கொத்தடிமை தொழிலாளர்கள் (Forced-labour) பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அமெரிக்கா இந்த அதிரடி வர்த்தக நெருக்கடியைக் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த உலகளாவிய கூடுதல் வரி விதிப்பை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்த நிலையில், தற்போது ‘செக்‌ஷன் 301’ என்ற வர்த்தகச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி புதிய வடிவில் இந்த வரிகளை விதிக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.

நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த ‘கட்டாய உழைப்பு’ குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச் சர்ச்சை குறித்து அமெரிக்கா தனி தன்னிச்சையான ஆய்வுகளை நிறுத்த வேண்டும் என்றும், இருநாட்டு வர்த்தக உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையின் போதே இது குறித்து ஆழமாக விவாதித்து முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது.

இது குறித்து சர்வதேச வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகையில், “யுஎஸ்டிஆர் நடத்தியதாகக் கூறும் ஆய்வையே இந்தியா தாராளமாக எதிர்க்கலாம். ஏனெனில், இந்த விசாரணை இந்திய ஏற்றுமதிகளில் கட்டாய உழைப்பு உள்ளதா என்பது பற்றியது அல்ல; மாறாக, இந்தியா வேறு இடங்களில் இருந்து வரும் கட்டாய உழைப்பு சார்ந்த இறக்குமதிகளைத் தடுத்ததா என்பது பற்றியது மட்டுமே. இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்களால் எடுக்கப்படும் ஒரு தந்திரோபாய உத்தியாகும். எனவே, இந்தியா ‘செக்‌ஷன் 301’ நடவடிக்கையையும், இருநாட்டு வர்த்தக ஒப்பந்தப் பிரச்சினையையும் தனித்தனியாகப் பிரித்துச் சாதுரியமாகக் கையாள வேண்டும்” என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version