திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இலவச தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் பக்தர்கள் காத்திருக்கும் சூழலும் ஏற்படும். திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் தேவைப்படுவோர் காசு கொடுத்து லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
சாமி தரிசனம் செய்ய எப்படி காத்திருக்க வேண்டுமோ, அதேப் போல லட்டினை வாங்கவும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பர். இதனால் பக்தர்கள் அவதியடைகின்றனர். லட்டு வாங்கும் நேரத்த குறைக்கும் பொருட்டு, நடவடிக்கை எடுக்க வெண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது லட்டு டோக்கன் பெற க்யூ ஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான பிரத்யேக எந்திரத்தில் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து விரைவாக பணம் செலுத்தி லட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டச் ஸ்கீரினுடன் கூடிய இந்த பிரத்யேக எந்திரத்தில், தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டு தேவை, மொபைல் எண்ணை உள்ளீடாக வழங்க வேண்டும். திரையில் தோன்றும் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து, நாம் லட்டுக்கான பணத்தை யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்தலாம். பின்னர், அந்த டோக்கனை கவுண்டரில் வழங்கி லட்டுகளை பெற முடியும். மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களும் லட்டு பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.