60 ஆண்டுகால பழமையான 1961-ஆம் ஆண்டு சட்டம் நீக்கப்பட்டு, எளிமையான மொழியில் வடிவமைக்கப்பட்ட புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ நாளை (ஏப்.1) முதல் அமலுக்கு வருகிறது. இது நாட்டின் வரி அமைப்பில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் குறிக்கும்.

வரி ஆண்டு’ (Tax Year) அறிமுகம்: நிதி ஆண்டு (FY) மற்றும் வரி மதிப்பீட்டு ஆண்டு (AY) என்ற குழப்பமான முறை நீக்கப்பட்டு, இனி ‘Tax Year’ என்ற ஒரே பொதுவான பெயரில் அழைக்கப்படும்.

HRA சலுகை விரிவு: சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இணையாக பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் வசிக்கும் வீட்டு வாடகைப்படியில் இனி 50% வரிவிலக்கு பெறலாம்.

PAN விதி மாற்றங்கள்: ஏப்ரல் 1, 2026 முதல், ஒரு நிதியாண்டில் மொத்தத் தொகை ரூ. 10 லட்சத்தைத் தாண்டினால், நிரந்தரக் கணக்கு எண் (PAN) வைத்திருப்பது கட்டாயமாகும். முன்னதாக, ஒரு நாளைக்கு ரூ. 50,000 டெபாசிட் செய்வதற்கு PAN தேவை என்ற விதி நடைமுறையில் இருந்தது.

மேலும், ஆதார் அட்டையை மட்டும் கொண்டு பான் (PAN) அட்டைக்கு விண்ணப்பிப்பது இனி அனுமதிக்கப்படாது. இதன் பொருள் என்னவென்றால், விண்ணப்பதாரர்கள் வாக்காளர் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற, பிறந்த தேதிக்கான கூடுதல் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

பங்கு திரும்பப் பெறுதல் (Buyback) – புதிய வரி விதிப்பு: பங்கு திரும்பப் பெறுதல் மூலம் கிடைக்கும் முழுத் தொகையும் ‘டிவிடெண்ட்’ (Deemed Dividend) ஆகக் கருதப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களின் வருமான வரி வரம்பு (Slab Rate) அடிப்படையில், அதிகபட்சமாக 30% முதல் 40% வரை வரி செலுத்த வேண்டியிருந்தது. மேலும், பங்குகளை வாங்கிய அடக்கவிலையை (Cost of Acquisition) கழிக்க முடியாமல், அது ‘மூலதன இழப்பாக’ (Capital Loss) மட்டுமே கணக்கிடப்பட்டது.

ஆனால், இனி பங்கு திரும்பப் பெறுதல் மூலம் கிடைக்கும் லாபம் ‘டிவிடெண்ட்’ ஆகக் கருதப்படாது. அதற்குப் பதிலாக அது ‘மூலதன ஆதாய வரி’ (Capital Gains Tax) வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் தாங்கள் பங்குகளை வாங்கிய விலையைக் கழித்தது போக, மீதமுள்ள இலாபத்திற்கு (Profit) மட்டுமே வரி செலுத்தினால் போதும்.

தங்கப் பத்திரங்கள்: இதுவரை, நீங்கள் தங்கப் பத்திரங்களை அரசிடமிருந்து நேரடியாக வாங்கினாலும் அல்லது பங்குச் சந்தை  வழியாக மற்றவரிடமிருந்து வாங்கினாலும், அந்தப் பத்திரம் முதிர்வடையும் போது கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி விலக்கு  அளிக்கப்பட்டது. இனி, அரசிடமிருந்து நேரடியாக முதன்முறையாக வெளியிடப்படும் போது (Original Issue) வாங்கப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கு மட்டுமே முதிர்வின் போது வரி விலக்கு அளிக்கப்படும். இரண்டாம் நிலைச் சந்தையில் திரும்பப் பெறப்படும் பத்திரங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

வருமான வரித் தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: புதிய விதிமுறையின்படி, வணிக நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளிட்ட, கணக்குத் தணிக்கைக்கு உட்படாத வரி செலுத்துவோருக்கான வருமான வரித் தாக்கல் காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈவுத்தொகை மற்றும் பரஸ்பர நிதி வருமானம்: முதலீடானது கடனாகப் பெறப்பட்ட நிதியைக் கொண்டு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈவுத்தொகை மற்றும் பரஸ்பர நிதிகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கணக்கிடும்போது, ​​வட்டிச் செலவுகளுக்கான எந்தவொரு பிடித்தமும் அனுமதிக்கப்படாது.

குழந்தைகள் கல்விப் படி: வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ், ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.100 மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டது (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு ரூ200). இந்த வரம்பு கடந்த 1990-களில் நிர்ணயிக்கப்பட்டது.

புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’-ன் படி, ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.3,000 வரை கல்விப் படிக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். அதாவது, ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.36,000 வரை நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்குப் பொருந்தும் (மொத்தம் ரூ.72,000 ஆண்டுக்கு).

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version