டெல்லியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கியத்துவம் மற்றும் பெண் சக்தியின் ஆற்றல் குறித்து நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளில் ஒன்றாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். “இந்த நூற்றாண்டிற்கான ஒரு மகத்தான தருணத்தை நாம் எட்டியுள்ளோம். இந்த மசோதா நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நாம் வரலாற்றை எழுதும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த முயற்சியை முழுமையாக நிறைவேற்றி முடிக்க தேசத்தின் கோடிக்கணக்கான பெண்களின் ஆசீர்வாதம் எனக்குத் தேவை,” என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்று முடிவு நாட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பையே மாற்றப்போகிறது என்று தெரிவித்த பிரதமர், நீதி என்பது வெறும் முழக்கத்தோடு நின்றுவிடாமல் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்றார். “சுமார் 40 ஆண்டு கால இந்தியர்களின் கனவு இன்று நனவாகிறது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது நன்றிகள். பெண்களின் கனவுகளுக்குப் புதிய சிறகுகளை வழங்குவதே இந்த மசோதாவின் அடிப்படை நோக்கம்,” என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது 14 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளைத் திறம்பட நிர்வகிப்பதையும், நிதி அமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவர் போன்ற உயர்ந்த பொறுப்புகளில் பெண்கள் அலங்கரிப்பதையும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

குஜராத் முதல்வராக இருந்த காலத்து அனுபவம் ஒன்றை பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். ஒரு கிராமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலும் பெண்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ‘பெண் பஞ்சாயத்து’ குழுவைச் சந்தித்த நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அந்தப் பஞ்சாயத்துத் தலைவியிடம், “ஐந்து ஆண்டுகளில் உங்கள் கிராமத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று அவர் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண்மணி அளித்த பதில் பிரதமரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.”என் கிராமத்தில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஒரே இலக்கு.”

எந்தப் பொருளாதாரப் புத்தகத்திலும் இல்லாத அளவுக்கு மிகவும் கூர்மையான மற்றும் எளிமையான அந்தப் பதில் தான், தான் முதல்வராகவும் பிரதமராகவும் பணியாற்றுவதற்கு மிக முக்கியமான உந்துசக்தியாக அமைந்தது எனப் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்தார். ஏழ்மையை ஒழிக்கும் அந்த இலக்கையே தான் இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version