துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற சுதர்சன் ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்திய துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த மாதம் 4-ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்தார்.
இந்தியா கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. திருச்சி சிவா, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேப் போல மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், திட்ட கமிஷன் முன்னாள் தலைவர் முங்கேசர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டது.
டெல்லியில் நேற்று இந்தியா கூட்டணி சார்பில் உயர்நிலை ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏகமனதாக அவரை தேர்வு செய்துள்ளன. இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் கிடைத்த பெரிய வெற்றியாகும். அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் இருக்கும்போது, அதைக் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து போராடுகிறோம். இந்த தேர்தலில் நாட்டுக்கு நல்ல பணிகளை செய்யக்கூடிய வேட்பாளர் தேவை என்று முடிவு செய்தோம்.
இதன்படி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் அவரும் ஒருவர். ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் திறம்படப் பணியாற்றி உள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு சித்தாந்த போர். இதன் காரணமாகவே நீதிபதி சுதர்சன் ரெட்டியை பொது வேட்பாளராக அறிவித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று மனு தாக்கல் செய்தார்.