ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் மூன்று இளைஞர்களை போலீசார் லத்தியால் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாகவும், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்தது என்ன?
தெனாலியைச் சேர்ந்த ஜான் விக்டர், ராகேஷ், சேக் பாபுலால் ஆகிய மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் போலீஸ் கான்ஸ்டபிள் சிரஞ்சீவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. கான்ஸ்டபிளை தாக்கியதற்காக இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டிய போலீசார், அவர்களை நடுரோட்டில் அமர வைத்து பொதுமக்கள் கண் முன்னே கொடூரமாக லாத்தியால் அடித்து ‘போலீஸ் ட்ரீட்மென்ட்’ கொடுத்தனர்.
வீடியோ வெளியாகி கண்டனம்
இந்தச் சம்பவத்தை சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர். போலீசார் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த வீடியோக்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெனாலி போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிபதிகள் செய்ய வேண்டிய வேலையை சட்டத்திற்குப் புறம்பாகச் செய்த மூன்று போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.