அரசியலில் கொள்கைகளை விடவும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் ‘காட்சி பதிவுகளே’ பெரும்பாலும் மக்களின் கவனத்தை தீர்மானிக்கின்றன. செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே அரங்கேறிய நாடகத்தனமான சம்பவங்கள், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ரீதியாகப் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு முறைகேடு மற்றும் மாணவர்கள் மீதான காவலத்துறைத் தாக்குதலைக் கண்டித்து பிரதமர் இல்லத்திற்கு வெளியே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினரால் அவர் வலுக்கட்டாயமாகத் தரையில் இழுத்துச் செல்லப்பட்டு, மூக்கில் ரத்தம் வழிய, வெள்ளை நிற டீ-சர்ட்டில் ரத்தக் கறைகளுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஒரு காலணியைக் கூட இழந்து, தூக்கிச் செல்லப்பட்ட ராகுல் காந்தியின் அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?
இச்சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர்கள், “ஒரு அமைதியான போராட்டத்தையோ அல்லது நாடாளுமன்றத்தில் விவாதத்தையோ அனுமதிப்பதற்குப் பதிலாக, மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கி இழுத்துச் சென்ற காட்சிப் படிமங்கள் மூலம், மத்திய அரசே காங்கிரஸுக்கு அவர்கள் எதிர்பார்த்த அரசியல் அடையாளத்தை வழங்கிவிட்டது. இது மோடி அரசின் ‘சுய கோல்’ (Self-goal) ஆக அமைந்து விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

1999-ஆம் ஆண்டு நடந்த இந்திய விமானக் கடத்தலின் போது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இல்லத்தின் முன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டம் நடத்தியதற்குப் பிறகு, பிரதமர் இல்லத்தின் முன் ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு போராட்டம் நடத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.
காங்கிரஸின் வியூகமும் பலன்களும்
கடந்த சில வாரங்களாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் ஜந்தர் மந்தரில் நடத்தி வந்த போராட்டங்கள் தேசிய அளவில் பெரிய கவனத்தைப் பெற்றிருந்தன. இதனால், தேர்வு முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸின் குரல் மங்கிப்போயிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ராகுல் காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கை ஒரே நாளில் அனைத்தையும் மாற்றியமைத்துள்ளது.மாணவர் போராட்டத்தின் முதன்மைத் தலைவராக ராகுல் காந்தியை மீண்டும் இது மையப் புள்ளிக்குக் கொண்டு வந்துள்ளது.
பிரதமருக்கு நேரடி அழுத்தம்
வெறும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவோடு நிற்காமல், விவகாரத்தின் மையப்புள்ளியாகப் பிரதமர் மோடியையே நேரடியாகப் பொறுப்பேற்கச் செய்யும் வியூகத்தை இது சாத்தியமாக்கியுள்ளது. காவல்துறையின் எல்லைமீறிய நடவடிக்கையால் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட காயங்கள், அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு போராட்டக்காரருக்கான தீவிரமான அனுதாப அலையை உருவாக்கியுள்ளன.

“இந்தியாவில் ஜனநாயகம் இப்போது நேரலையில் நடந்துகொண்டிருக்கிறது” எனப் போலீஸ் பேருந்தில் ஏறும் முன் ராகுல் காந்தி கூறிய வார்த்தைகள், தற்போதைய இந்திய அரசியலில் காங்கிரஸ் மீதான பார்வையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. இந்த எழுச்சியுடன் காங்கிரஸ் மீண்டெழுமா இல்லை வழக்கம்போல் ஒருநாள் கூத்துடன் அடங்கிப்போய்விடுமா என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும்.
